மொபைல், மடிக்கணினி என்று அதிக நேரம் திரைகளையே பார்த்தபடி இருப்பவர்களுக்கு மனச் சோர்வு, தற்கொலை எண்ணங்கள் போன்ற அறிகுறிகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்கிறது, 'ஜர்னல் ஆப் கிளினிகல் சைக்காலஜிகல் சயின்ஸ்' இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரை.
கடந்த, 1991லிருந்து, 2015 வரையில் பதின் வயதினரின் பொழுதுபோக்கு நேரத்தை ஒப்பிட்டு ஆய்வு செய்தபோது, குறைந்தது ஐந்து மணி நேரமாவது மின்னணு திரைகளை பார்த்தபடி இருந்தோரில், 50 சதவீதத்தினருக்கு மனச் சோர்வு, தற்கொலை எண்ணங்கள் போன்ற அறிகுறிகள் எட்டிப் பார்ப்பதாக தெரிய வந்தது.
இதுவே ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக திரைகளை பார்த்தவர்களில், 28 சதவீதத்தினருக்கே இத்தகைய அறிகுறிகள் தோன்றுவதாகவும் அந்த ஆய்வு சொல்கிறது.
குழந்தை பிறந்த, ஆறு மாதங்கள் வரையாவது தாய்ப்பால் கொடுப்பது, அந்தக் குழந்தைக்கு பிற்காலத்தில், 'எக்சிமா' என்ற தோல் நோய் வருவதை தடுக்க உதவும் என்கிறது, 'ஜே.ஏ.எம்.ஏ., பீடியாட்ரிக்ஸ்' இதழில் வெளியாகியுள்ள விரிவான ஒரு ஆய்வு.
உலகிலேயே மிகவும் குறைவான காலம் தாய்ப்பால் கொடுக்கும் வழக்கமுள்ள பிரிட்டனில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
13 ஆயிரம் அம்மாக்கள் மத்தியில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின்படி, தாய்ப்பால் கொடுத்த குழந்தைகளுக்கு, அவர்களின் பதின் வயதுகளில் எக்சிமா போன்ற சரும நோய்கள் வராமல் இருப்பதற்கு, 54 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. தாய்ப்பாலின் நன்மைகள் பல, அதில் இதுவும் ஒன்று.

0 comments: